இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இராம கிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி இந்நாட்டிலுள்ள புகழ் பூத்த பாடசாலைகளில் ஒன்றாகும். ஒரு வெற்றிகரமான கல்வி நிறுவனமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் இக்கல்லூரி சமூகம் கொண்டிருக்கும் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுகின்ற பணியை செவ்வையாக ஆற்றிக் கொண்டிருக்கிறது.
வெற்றிகரமான ஒரு கல்வி நிறுவனம் வெறுமனே கல்வியை வழங்கும் நிலையமாக மாத்திரம் இருக்காது. தான் இயங்குகின்ற சமூகத்தினுடைய ஆளுமை, ஆற்றல், மேம்பாடு என்பவற்றின் அடையாளமாக அந்நிறுவனம் திகழும் அத்துடன் மொழி, சமயம், பண்பாடு, மரபுகள் என்பவற்றின் வளர்ச்சிக்கும் பேணுகைக்கும் பெரும் பங்காற்றிக் கொண்டிருப்பதைக் காண முடியும். அத்தகைய அடையாளங்களுடனும் சமூகபப்பங்களிப்புடனும் வரலாற்றில் நூற்றி இருபத்திமூன்று வருடங்களை எட்டி திருக்கோணமலை இராம கிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி இன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படுகின்றௌம். எங்களை ஆளாக்கி வைத்த கல்லூரியின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய சில குறிப்புக்களை ஒழுங்குப்படுத்திப் பார்ப்பது அவசியமானதாகும்.
கல்லூரியின் வளர்ச்சியை பின்வரும் கட்டங்களாக ஒழுங்கு படுத்தி நோக்குவது பொருத்தமானதாகவும் வசதியானதாகவும் அமையும்.
திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பத்தை நாம் 19ம் நூற்றாண்டின் மிகப் பிந்திய ஆண்டுகளில் காணமுடிகின்றது. 1897ம் ஆண்டளவில் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாக சான்றுகள் பகருகின்றன. இந்நகரில் வாழ்ந்த சில இந்துப் பெரியார்களினால் இக்கல்லூரி ஒரு சிறிய பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. தியாக சிந்தையுடன் பணிபுரிந்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை காரணமாக இக்கல்லூரி தொடக்க காலத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலையாக உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
1922ம் ஆண்டில் இக்கல்லூரி ஒரு ஆரம்பப் பாடசாலையாக உத்தியோக பூர்வமாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டது. சமூகத்தில் மதிப்புடன் திகழ்ந்த இந்துப் பெரியார்களைக் கொண்ட ஒரு இயக்குநர் சபையினால் இப்பாடசாலை நிர்வகிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. ஆரம்ப காலத்தில் இக்கல்லூரி இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை (Hindu Boys Tamil School) இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை (Hindu Boys English School) என இரு பிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது. சுவாமி விபுலானந்தர் 1925இல் இப்பாடசாலையைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே ஆங்கில மொழிக்கல்வி இப்பாடசாலையிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையின் தலைமை ஆசிரியராக யாழ்ப்பாணம் வல்வெட்டியைச் சேர்ந்த திரு.வி.தம்பையா என்பவர் 1910ம் ஆண்டிலிருந்து 1922ம் ஆண்டுவரை நீண்டகாலமாகப் பணியாற்றியுள்ளார். திரு.ஆறுமுகம், திரு.பரமசாமி என்போரும் தமிழ்ப்பாடசாலை தலைமையாசிரியர்களாகக் கடமையாற்றியுள்ளனர். இதே காலகட்டத்தில் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் பின்வருவோர் தலைமையாசிரியர்களாகக் கடமை புரிந்துள்ளனர்.
1910ம் ஆண்டளவில் இந்து தமிழ்ப்பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையுமே இருந்துள்ளது. ஆங்கிலப்பாடசாலையிலும் ஐந்தாம் வகுப்பு வரையுமே இருந்துள்ளது. மாணவர்கள் தமிழ்ப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையும் படித்து முடித்து விட்டு ஆங்கிலப் பாடசாலையில் முதலாவது வருடம்இ இரண்டாவது வருடம் அதற்கடுத்து ஐந்தாம் வகுப்பு என்ற முறைப்படியில் வகுப்புக்கள் அமைந்திருந்தன. பாடசாலைப் பரிசோதகர் (Inspector of School) வந்து மாணவர்களைப் பரீட்சிக்கும் வழக்கம் இருந்தது.
1921ம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாiலையில் ஆறாம் வகுப்பு இல்லாதிருந்ததனால் இப்பாடசாலையில் ஐந்தாம் வகுப்பைச் சித்தியடைந்த மாணவர்கள் தொடர்ந்து ஆறாம் வகுப்பில் கற்பதற்காக வெஸ்லியன் மிஷன் பாடசாலைக்கு (தற்போதைய மெதடிஸ்த பெண்கள் கல்லூரி) சென்றனர். ஆனால் 1921ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆங்கிலப் பாடசாலையிலும் ஆறாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு விட்டதனால் இங்கிருந்து வெஸ்லியன் மிஷன் பாடசாலைக்குச் சென்ற பல மாணவர்கள் திரும்பவும் இங்கேயே வந்தனர்.
தலைமையாசிரியர் திரு.கே.கோவிந்தாச்சாரி காலம், வரையில் இந்து ஆங்கிலப் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரையுமே இருந்துள்ளது. எட்டாம் வகுப்பு இறுதியில் நடைபெறுகின்ற அரசாங்கப் பரீட்சை ESLC (Elementary School Leaving Certificate) அழைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் இப்பாடசாலையை 1925 இல் பொறுப்பேற்கையில் திரு.கே.கோவிந்தாச்சாரி அவர்களே தலைமையாசிரியராக இருந்தார் என்பதை அறியமுடிகின்றது.
சுவாமி விபுலானந்தர் இப்பாடசாலையைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக பாடசாலையின் முகாமையாளர் சபையில் காலத்திற்குக் காலம் பின்வருவோர் இடம்பெற்றிருந்தனர்.
1925ம் ஆண்டு இக்கல்லூரியைப் பொறுத்த அளவில் முக்கியமான ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில் தான் சுவாமி விபுலானந்தர் இராமகிருஷ்ண மிஷன் சார்பில் இக்கல்லூரியைப் பொறுப்பேற்றார். 1924ம் ஆண்டில் சுவாமி விபுலானந்தர் இராமகிருஷ்ண மடத்துத் துறவியாக இலங்கைக்கு மீண்டதிலிருந்து கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பித்தது எனலாம். இந்துப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் சுவாமி அவர்கள் எடுத்துக் கொண்ட அதீதமான அக்கறை வரலாற்றில் உன்னதமான எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
சுவாமி அவர்களது ஆழ்ந்த அறவின் திறத்தினாலும், கல்விப் பிரச்சனைகளின் பாலுள்ள அகன்ற அனுபவத்தினாலும், முற்போக்குடைய நேரிய சிந்தனையாலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் பயன்பெறத் தொடங்கின. கிழக்கு மாகாண மக்கள் நல்ல ஒரு கல்விச் சிந்தனையாளரையும்இ வழிகாட்டியையும் பெற்றுக் கொண்டனர். சுவாமி அவர்கள் இந்தியாவிலிருந்து மீண்டதன் பின்இ முதன் முதலில் அவர் தனது கல்விப் பணியை ஆரம்பித்தது திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் தான் என்றால் அது மிகையாகாது.
1925ம் ஆண்டில் திரு.சி.வல்லிபுரம்பிள்ளை முதலியார் தலைமையில் இருந்த முகாமையாளர் சபை பாடசாலையை இராமகிருஷ்ண மிஷனுக்குக் கையளிப்பதற்கு முடிவு செய்ததை அடுத்து சுவாமி விபுலானந்தர் அவர்கள் பாடசாலையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். சுவாமி அவர்கள் பாடசாலைக் கையேற்ற திகதி 01.06.1925 ஆகும். விபுலானந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆங்கிலப் பாடசாலையும்இ இந்து தமிழ்ப் பாடசாலையும் துரிதமான வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றது. புதிய கட்டங்களும் கட்டப்படலாயின.
சுவாமி விபுலானந்தர் கையேற்ற போது தமிழ்ப் பாடசாலைக்கு ஒரு கட்டமும், ஆங்கிலப் பாடசாலைக்கு ஒரு கட்டடமும்தான் இருந்தன. இக்கட்டடங்களில் போதிய இடவசதி மாணவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் பக்கத்தில் இருந்த காணியைக் கொள்வனவு செய்து பாடசாலைக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக சுவாமி அவர்களும், ஆசிரியர்களும் பொது மக்களிடம் சென்று நிதி சேகரித்தார்கள். இதில் பெருமளவு நிதியை அளித்தவர் தம்பலகாமத்தைச் சேர்ந்த திரு.காளியப்பு அவர்களாவார். இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய மண்டபம் 1927ம் ஆண்டில் ஆளுநராக இருந்த சேர்.ஹேர்பட்ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இம்மண்டபம் பின்னர், காளியப்பு மண்டபம் எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்டது.
இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக் காலமாகிய திரு.பி.கே.சம்பந்தரது. நினைவாக 1933ம் ஆண்டில் கட்டப்பட்ட மண்டபம், அக்கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு அரசாங்க அதிபராக இருந்த திரு.வி.குமாரசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்புவிழா வைபவத்தில் திருக்கோணமலை உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.எம்.கே.சண்டிஸ் என்னும் ஆங்கிலேரும் கலந்து கொண்டார்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் 1925ம் ஆண்டில் இக்கல்லூரியைப் பொறுப்பேற்றதிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றி கல்லூரியின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். சுவாமி அவர்கள் விஞ்ஞான பாடத்தைக் கற்பிப்பதில் ஒரு சிறந்த ஆசிரியராகவும்இ விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்துவதில் ஆர்வமாகவும் இருந்தவர். அவர் இப்பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்தினார். அக்காலத்தில் திருக்கோணமலையில் இயங்கிய வேறெந்தப் பாடசாலையிலும் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் இருக்கவில்லை. சுவாமிகள் தனது காலத்திலே இலண்டன் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையை மாணவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் இக்கல்லூரியில் பணியாற்றிய போது திரு.கே.இராமசாமி ஐயர் (M.A.L.T), திரு.நரசிம்மர், திரு.நம்பியார் ஆகியோர் தலைமையாசிரியர்களாகக் கடமையாற்றியுள்ளனர். இவர்கள் யாவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் திரு.கே.இராமசாமி ஐயர் அவர்கள் பின்னர் இக்கல்லூரியிலிருந்து விலகிச் சென்று கல்வித் திணைக்களத்தில் (கொழும்பு) பிரதம மொழி பெயர்ப்பாளராகக் கடமையாறிறியுமுள்ளார்.
இந்து தமிழ் பாடசாலையில் மட்டக்களப்பைச் சேர்ந்த பண்டிதர் திரு.செ.பூபாலபிள்ளை அவர்களும், திரு.கே.கணபதிபிள்ளை அவர்களும் தலைமை ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளனர்.
1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1930ம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் அதிபராகக் கடமையாற்றி பின்னர் இராமகிருஷ்ண மிஷன் கீழுள்ள சகல பாடசாலைகளையும் பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்று அதிபர் பதவியை திரு.பி.இராமச்சந்திரா M.A(Hons) அவர்களிடம் கையளித்துச் சென்றார்.
1932ம் ஆண்டில் இக்கல்லூரி சிரேட்ட இடைநிலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இராமகிருஷ்ண மிஷனின் அரவணைப்பில் உயர்ந்த இலட்சியங்களோடு வீறுநடைபோட்டு வந்த கல்லூரியின் வளர்ச்சி இரண்டாம் மகா யுத்தத்தின் போது 1940ம் ஆண்;டிலிருந்து 1945ம் ஆண்டு வரை தடைப்பட நேர்ந்தது. யுத்தகாலத்தின் போது பாடசாலை கட்டடங்கள் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டன. இக்காலத்தில் ஆங்கிலப் பாடசாலை ஒரு சிறிய வாடகை வீட்டிலும் தமிழ்ப்பாடசாலை இன்னோரிடத்திலும் தற்காலிகமாக இயங்கிக் கொண்டிருந்தன. 1945ம் ஆண்டில் மீண்டும் கல்லூரி தனது சொந்தக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து பழைய மாணவர்களதும், அபிமானிகளினதும் உதவிகள் கல்லூரிக்குக் கிடைக்கத் தொடங்கின. இவ்வுதவிகளினால் இராணுவப்பாவிப்பின் காரணமாக சேதமுற்ற கட்டடங்கள் திருத்தம் பெற்றன.
கால ஓட்டத்தில் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை இந்துக்கல்லூரி என்ற பெயரோடு மாவட்டத்தின் முன்னணிக் கல்லூரியாக வளர்ச்சி பெற்று வந்தது. இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை கோணேஸ்வரா வித்தியாலயம் என்ற பெயரோடு ஆரம்ப. இடைநிலைக் கல்விக்கு மாவட்டத்தின் சிறந்த பாடசாலையாக உருவாகி வந்தது.
1942ம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் இரண்டு பெரிய வகுப்பறைகளை இந்துக்கல்லூரிக்கு அமைத்துக் கொடுத்தது. 1947ம் ஆண்டில் திரு.எல்.எச்.ஹரதாச அவர்கள் தனது காலஞ்சென்ற தந்தையார் நொரிஸ் டிசில்வா அவர்களின் நினைவாக ஒரு நூலகக் கட்டடத்தை அமைத்துக் கொடுத்தார். இந்நூலகக் கட்டடம் 1947ம் ஆண்டில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.நுகவெல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதிகரித்து வந்த மாணவர்களது தேவைக்காகப் பக்கத்திலிருந்த காணி சுவீகரிக்கப்பட்டு அதிலே நான்கு வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டடம் அமைக்கப்பட்டது. விஞ்ஞான ஆய்வுகூடங்கள் சீராக்கப்பட்டு புதிய கருவிகளும் உபகரணங்களும் அமைக்கப்பட்டன.
1950ம் ஆண்டில் திரு.பி.ரகுபதி அவர்களும் 1954ம் ஆண்டில் திரு.எஸ்.அம்பலவாணர் அவர்களும் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டனர். திரு.எஸ்.அம்பலவாணர் அவர்கள் தனது பதவிக்காலத்தில் சமூகத்தில் கல்லூரியின் மதிப்பை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார். ஐம்பதுகளில் சிங்கள மொழி மூலப்பிரிவு ஒன்றும் கல்லூரியில் இயங்கியுள்ளது. 1961ம் ஆண்டளவில் சிங்கள மொழி மூல மாணவர்கள் புதிய பாடசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார்கள். அப்பாடசாலையே பின்னாளில் சிங்கள மத்திய மகா வித்தியாலயமாக வளர்ச்சி பெற்றது.
1952ம் ஆண்டில் நிலாவெளியைச் சேர்ந்த திரு.எஸ்.கணபதிப்பிள்ளை அவர்களால் திருக்கோணமலை ஏகாம்பரம் வீதியிலுள்ள ஒரு கடைத்தொகுதி இராமகிருஷ்ண மிஷனுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இச் சொத்திலிருந்து கிடைக்கின்ற வருமானம் இந்துக்கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடனே இச் சொத்து கையளிக்கப்பட்டது. அவ்வப்போது இவ்வருமானம் இந்துக்கல்லூரிக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பதாக இராமகிருஷ்ண மிஷன் இக்கடைத் தொகுதியை அதில் நீண்ட காலமாக வாடகைக்குக் குடியிருந்த வர்த்தகர்களுக்கு விற்று விட்டது.
இந்துக்கல்லூரியும் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலமும் இராம கிருஷ்ண மிஷனின் ஓரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் 1962ம் ஆண்டில் மிஷனரிப் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்த போது இந்தப் பாடசாலைகளை தனித்தனியான இரு பாடசாலைகளாகவே இராம கிருஷ்ண மிஷன் கையளித்தது. ஒரே கொடியையும், நிறத்தையும், இலச்சினையையும், கீதத்தையும் கொண்டு சகோதர பாடசாலைகளாக அருகருகே இருந்து இந்த இரு பாடசாலைகளும் கல்விப் பணி புரிந்து கொண்டிருந்தன. ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை மட்டக் கல்விக்கு மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளாக இவை மிளிர்ந்தன.
1962ம் ஆண்டில் அதிபர் திரு.எஸ்.அம்பலவாணர் அவர்கள் இரத்மலானை இந்துக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல பிரதி அதிபராக இருந்த திரு.க.சிவபாலன் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1964 மார்கழி மாதம் கடும் சூறாவளியினால் திருக்கோணமலை நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்ட போது அதிபர் திரு.க.சிவபாலன் தலைமையில் கல்லூரியின் மாணவர்கள் பாரிய சிரமதானப் பணியில் ஈடுபட்டு நகரத்தை சுத்தம் செய்தமை பலரது பாராட்டையும் பெற்றது.
இந்துக்கல்லூரியின் முதலாவது பல்கலைக்கழக மாணவனாக கலைப்பிரிவிற்கு திரு.கோபாலசிங்கம் அவர்கள் 1964 இல் தெரிவு செய்யப்பட்டார்.
1968ம் ஆண்டின் இறுதியில் அதிபா; திரு.க.சிவபாலன் அவர்கள் பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகத்திற்கு உதவி அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். 1969இல் திரு.எஸ்.இளையதம்பி அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். 1971ம் ஆண்டின் தொடக்கத்தில் திரு.ஆர்.கிருஸ்ணபிள்ளை அவர்களும்இ இறுதிப்பகுதியில் திரு.ஏ.நடராஜா அவர்களும் அதிபர் பதவியைப் பொறுப்பேற்றனர்.
1978ம் ஆண்டில் கோணேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் முதன் முதலாக க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றினர்.
1978 இல் திரு.அ.சிவலோகநாதன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். 1982 இல் புதிய விஞ்ஞான ஆய்வு கூடங்களும், மாடிக் கட்டடங்களும் (விபுலானந்தர் அகம், விவேகானந்தர் அகம், சிவானந்தர் அகம்) திறந்து வைக்கப்பட்டதுடன் “உள்ளக்கமலம்” என்ற கல்லூரியின் சஞ்சிகையும் முதற் தடவையாக வெளியிப்பட்டது.
இலங்கையின் பாடசாலை நிர்வாக ஒழுங்கில் கொண்டு வரப்பட்ட பாடசாலை கொத்தணி முறையில் திருக்கோணமலை மத்திய கொத்தணியின் மையப் பாடசாலையாக இந்துக்கல்லூரி இயங்கத்தொடங்கியது.
1989 இல் அதிபர். அ.சிவலோகநாதன் அவர்கள் சேவையிலிருந்து ஒய்வு பெற திரு.ச.குணரட்ணம் அவர்கள் அதிபராகப் பொறுப் பேற்றுக் கொண்டார். திரு.அ.சிவலோகநாதன் அவர்கள் 1978ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டு வரை ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் அதிபராக இருந்த காலத்தில் இக்கல்லூரி பெரு வளர்ச்சியைக் கண்டது என்று கூறினால் அது மிகையாகாது. இவரது காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாகவும், கட்டடம் மற்றும் பௌதீக வசதிகள் தொடர்பாகவும் பல முன்னேற்றங்களைக் கல்லூரி கண்டது அனுபவமும், திறமையும் கொண்ட நல்லாசிரியர்களை இக்கல்லூரி பெற்றுக் கொண்டதனால் உயர்தரக் கல்வியைப் பொறுத்தவரையில் இம்மாவட்டத்திலேயே ஒரு முதன்மையான இடத்தை இக்கல்லூரி வகிக்கின்றது.
1970ம் ஆண்டுக் காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதி முறையில் அரசினால் கடைப்பிடிக்கப்பட்ட மாவட்ட அடிப்படை அனுமதிப் பங்கீட்டு முறையினால் திருக்கோணமலை போன்ற பின்hங்கிய பகுதி மாணவர்கள் உற்சாகம் பெற்றனர். இந்த உற்சாகத்தை இக்கல்லூரி தகுந்த வகையில் பயன்படுத்திக் கொண்டது. இந்த உற்சாகம் காரணமாக இம்மாவட்ட மாணவர்கள் உயர்கல்வியை நோக்கி உந்தப்பட்டார்கள். இன்று இந்த மாவட்டத்திலிருந்து அதிகமான மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்ற முதன்மையான பாடசாலை இந்துக்கல்லூரியே தான் என்றால் அது மிகையானதல்ல.
1990 இல் பிரதி அதிபராக கடமையாற்றிய திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராகக் கடமையாற்றிய திரு.ச.குணரட்ணம் அவர்கள் மாகாணக் கல்வித்திணைக்களத்திற்கு கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றுச் சென்றார். பல வருடங்களாக இயங்காதிருந்த பழைய மாணவர் சங்கம் 1991ல் மறுசீரமைக்கப்பட்டு வைத்திய கலாநிதி கு.ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இயங்கத் தொடங்கியது. அன்றிலிருந்து கல்லூரியின் அபிவிருத்தியில் பிரிக்க முடியாத ஒரு துணை உறுப்பாக பழைய மாணவர் சங்கம் காத்திரமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையாகவிருந்து அரசாங்கப் பாடசாலையாக 1962 இல் இக்கல்லூரி சுவீகரிக்கப்பட்டாலும் இராமகிருஷ்ணமிஷன் தொடர்புகளை இக்கல்லூரி தொடர்ந்து பேணிக் கொண்டே வருகின்றது. தனது உத்தியோக பூர்வமான பெயரிலும் கூட இராமகிருஷ்ணமிஷன் என்ற சொற்களை சேர்த்தே வைத்துள்ளது. சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு தின வைபவங்களோடு ஒட்டியதாக 1992ம் ஆண்டில் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டது. சுவாமி ஆத்மகனாந்தா அவர்களாலும் சுவாமி ஜீவானந்தா அவர்களாலும் இச்சிலை திறந்த வைக்கப்பட்டது. இச்சிலை திறப்பு வைபவத்திலிருந்து கல்லூரிக்கும் இராம கிருஷ்ண மிஷனுக்குமிடையேயான தொடர்புகளும் நெருக்கமடைந்து வந்தன. இராம கிருஷ்ண மிஷன் சுவாமிகள் பலரும் கல்லூரிக்கு அடிக்கடி வந்து போயினர்.
இந்துக்கல்லூரியில் ஆரம்பப் பிரிவைத் தொடங்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1992 இல் தரம் 1 தொடக்கம் 5 வரை வகுப்புக்கள் ஒரே தடவையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்துக்கல்லூரியும் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் இணைக்கப்பட்டு தேசிய பாடசாலையாக ஆக்கப்படும் வரையில் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயத்தில் திரு.சு.கு.குமாரசுவாமி ஐயர், பண்டிதர்.இ.வடிவேலு, திரு.க.நடராசா, திரு.க.வேலுப்பிள்ளை, திரு.ச.சிவபிரகாசம், திரு.க.ஜீவரெத்தினம் ஆகிய அதிபர்கள் மிகச் சிறப்பான முறையில் கடமையாற்றியுள்ளார்கள். ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் ஆரம்பக்கல்வித் துறையில் முன்னணி நிலை பெற்று விளங்கியதற்கு மேற்படி அதிபர்களின் உழைப்பே பிரதான காரணமாகும். அதிபர் திரு.சு.கு.குமாரசுவாமி ஐயர், அவர்கள் மிஷன் நிர்வாக காலத்திலிருந்தே நீண்ட காலமாக அதிபராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்துக்கல்லூரியும் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் 1993ம் ஆண்டில் ஒரே பாடசாலையாக இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தையும் பெற்று இணைந்து கொண்டன. இவ்விரு பாடசாலைகளினதும் இணைப்பை திருக்கோணமலையின் கல்விச் சமூகம் பெரிதும் வரவேற்றது. ஏற்கனவே மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றிக் கொண்டிருந்த இவ்விரு பாடசாலைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஆரம்ப, இடைநிலை, உயர்தரக் கல்விக்காக மாவட்டத்தில் ஒரு பெரிய வலுவான கல்வி நிறுவனமாக உருவாகியமை காலத்தின் தேவையாக அமைந்திருந்தது எனலாம். திருக்கோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை முதலாவதாகவும், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இரண்டாவதாகவும் தேசிய பாடசாலையாகிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. தேசிய ரீதியாக தேசிய பாடசாலை வரிசையில் நாற்பதாவது இடத்தில் இப்பாடசாலை உள்ளது.
1990ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். மிக நீண்டகாலம் இக்கல்லூரியில் அதிபராகப் பணிபுரிந்தவராக இவர் காணப்படுகின்றார்.
இவரது காலத்தில் நவீன கல்விப்போக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதாக இக்கல்லூரியின் முகாமைத்துவக் கட்டொழுங்கு மாற்றப்பட்டது. சமூகத்தை நோக்கி இக்கல்லூரி முழுமையாகத் திறந்து விடப்பட்டது என்று சொல்லத்தக்க வகையில் சமூகத்தொடர்புகள் அதிகரித்தன. பழைய மாணவர் சங்கம் புத்துயிர் பெற்றது. கல்லூரியின் அபிவிருத்திக்குத் துணையாக சகல பழைய மாணவர்களும் திரண்டனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கல்லூரியின் பல்வேறு விதமான வளர்ச்சிகளையும் நோக்கி திட்டமிட்டுப் பணியாற்றியது. கல்லூரிக்கான நண்பர்களும் நலன் விரும்பிகளும் பெருகினர். இதன் காரணமாக 1990 களில் நிதானமானதும், வலுவானதுமான வளர்ச்சிப்படிகளை கல்லூரி தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வடகிழக்கு மாகாணத்தின் சிறந்த சமூகத்தொடர்புள்ள பாடசாலையாக இக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்றது.
பௌதீக வசதிகள் விருத்தியடைந்து சென்றன. புதிய வகுப்பறை மாடிக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன. ஒரு கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்ட கேட்போர் கூடங்களும், நூலகம் நிருவாகத் தொகுதி என்பவை அடங்கிய புதிய கண்கவர் கட்டடம் 2000ம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகனானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரிக்கு முன்பாக உள்ள பொது முற்றவெளி மைதானத்தில் கல்லூரியின் விளையாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மைதானத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவிவந்த பிரச்சனைகளுக்கு 1999ம் ஆண்டு இறுதியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மாவட்டத்தின் அரச உயர்மட்டத் தலையீடுகள், நெருக்குதல்களுக்கிடையிலும் கல்லூரிச் சமூகம் உறுதியாகவும் துணிவோடும் நின்று கல்லூரிக்கான மைதானக் காணியை எல்லையிட்டு வேலியிட்டு சட்டபூர்வமாக தனதாக்கிக் கொண்டது. இம்மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் கல்லூரி நிர்வாகத்தால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் உள்ள பழைய மாணவர்களின் பங்களிப்புடன் மைதானத்தில் 2011, 2016ம் ஆண்டுகளில் இரண்டு பார்வையாளர் அரங்குகள் அமைக்கப்பட்டன. 2007ம் ஆண்டில் கூடைப்பந்தாட்ட தளமும் அமைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஆசிரியர்களாலும் கல்லூரி நிர்வாகத்தினாலும் எடுக்கப்படுகின்றன. மாவட்ட, மாகாண, தேசிய மட்டப் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி வெற்றிகளை பெற்றுக் கொள்கின்றனர். மட்டக்களப்பில் அமைந்துள்ள இராம கிருஷ்ண மிஷன் சிவானந்தா வித்தியாலயத்துடன் வருடாந்த நிகழ்வாக மாபெரும் கிரிக்கட் போட்டி 1993ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பிலும், திருக்கோணமலையிலும் மாறி மாறி இப்போட்டி வருடாவருடம் நடைபெற்று வருகின்றது. சகோதர பாடசாலைகளுடன் நட்புறவை பேணுதல் கல்லூரியின் விருப்புக்குரிய ஒரு நடவடிக்கையாகும்.
வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளத் தொடங்கினர். 2002 இல் கனடாவிலும், 2003 இல் ஐக்கிய இராச்சியத்திலும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. அண்மைக்காலத்தில் பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளிலும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்கள் அமைக்கப்பட்டன. தலைநகர் கொழும்பிலும் பழைய மாணவர் சங்க கிளை இயங்கி வருகின்றது. இவை கல்லூரியின் கல்வி அபிவிருத்திக்கும் பௌதீகவள விருத்திக்குமாக தங்களது பங்களிப்பினை வழங்கிவருவது பாராட்டக்குரியது.
தகவல் தொடர்பாடல் கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் கணிசமான அபிவிருத்தி நடவடிக்கைகளை பழைய மாணவர் சங்க கிளைகள் மேற்கொண்டு வருகின்றன. 1997ம் ஆண்டில் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவையொட்டி பழைய மாணவர் சங்கத்தினர் கணணிக்கூடம் ஒன்றை உருவாக்கி அளித்தனர். பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் கல்வியை அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுப்பதற்கு முன்னதாகவே பழைய மாணவர் சங்கத்தினர் தகவல் தொடர்பாடல் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னுணர்ந்து கல்லூரிக்கென கணணிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தமை அக்கால கட்டத்தில் பலராலும் பாராட்டப்பட்டது. 2004ம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க நிதியுதவியுடன் 10 இலட்சம் ரூபா செலவில் கட்புல செவிப்புல சாதன அறை (Audio Visual Room) ஒன்று கல்லூரியில் அமைக்கப்பட்டது. வசதியற்ற மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்காக கனடா பழைய மாணவர் சங்கம் 2003 இல் டாக்டர் ஞானி கல்வி நிதியத்தைப் தாபித்து மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கியது. 2003 இல் கல்லூரிக்கான இணையத்தளமும் (tcohindu@yahoo.com) ஆரம்பிக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாணப் பாடசாலைகளில் சிறந்த ஒரு பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் இக்கல்லூரியிலேயே அமைந்திருக்கின்றது. மாகாணக் கூட்டுறவுத் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியில் தொடர்ந்து பல வருடங்களாக இக்கல்லூரியின் கூட்டுறவுச் சங்கமே மாகாணத்தின் சிறந்த பாடசாலைக் கூட்டுறவுச் சங்கமாக தெரிவு செய்யப்பட்டு வருகின்றது. 1975 இல் பதிவு செய்யப்பட்ட இக்கூட்டுறவுச் சங்கம் பல காலங்களாக செயலிழந்த நிலையிலிருந்து பின்னர் 1990ல் மீளவும் புனரமைக்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் நுகர்பொருட்கள் விற்பனைச் சேவைகளையும் சேமிப்பு, கடன் வழங்குதல் போன்ற சேவைகளையும் மிக நேர்த்தியான முறையில் இக்கூட்டுறவுச் சங்கம் ஆற்றிவருகின்றது.
பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளில் மாவட்ட, மாகாண நிலைகளில் கல்லூரி முன்னணி நிலையைத் தொடர்ந்து பெற்றுக் கொள்கின்றது. சில சந்தர்ப்பங்களில் தேசிய மட்டத்திலும் முதன்மை நிலைகளைப் பெற்றுக் கொள்கின்றது. பல்கலைகழகத்திற்கு அனுமதி பெறுவோர் தொகை அதிகரித்துச் செல்கின்றது. பொறியியல்இ மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாவட்டத்திற்குரிய அனுமதிப் பங்கின் பெரும் பகுதியை இக்கல்லூரி மாணவர்களே பெற்றுக் கொள்கின்றனர்.
மாணவர்களது ஆன்மீக விருத்தியில் இக்கல்லூரி அக்கறை செலுத்துகின்றது. இந்து சமய கலாசார நடைமுறைகளில் மாணவர்களைப் பக்குவப்படுத்தும் நோக்கமாக 1997ம் ஆண்டில் கல்லூரியில் அழகான சித்தி விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றௌர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரது முயற்சியினால் ஆறு இலட்சம் ரூபா செலவில் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவிலில் நாளாந்த பூஜை மற்றும் நவராத்திரி விசேட பூஜைகள் கிரமமாக நடைபெறுகின்றன. கல்லூரியில் வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி கலைவிழாவும் அது தொடர்பான கலாச்சார போட்டிகளும் முக்கிய இடத்தை பெறுகின்றன. இந்நவராத்திரி கலைவிழாவிலே மொழிக்கும், சமயத்திற்கும் பணியாற்றிய ஒரு பெரியாரை தேர்தெடுத்து அவரை பாராட்டி கௌரவிப்பது வழமையாகும். கல்லூரியின் இந்து மாணவர் மன்றம் “சாரதை” என்ற சஞ்சிகையை வருடாந்தம் வெளியிடுகின்றது. இக்கல்லூரி அடிப்படையிலும் ஒரு இந்துப் பாடசாலையாக விளங்கினாலும் இங்கு கல்வி பயிலும் ஏனைய சமயத்தைச் சேர்ந்த மாணவர்களது சமய அநுட்டானங்களுக்கும் இடமளித்து சகலரையும் அரவணைத்துச் செல்கின்றது.
கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்கு தனியாகவும், இடைநிலைப்பிரிவுக்கு தனியாகவும் வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் நடைபெறுகின்றன. இப்பரிசளிப்பு விழாவின் போது “உள்ளக்கமலம்” என்ற சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடலின் போது “சாரல்” என்ற தகவல் கையேடும், க.பொ.த உயர்தர மாணவர் ஒன்றியத்தின் “திராணி” என்ற சஞ்சிகையும் வருடாந்த வெளியிடப்படுகின்றது.
2004ம் ஆண்டில் அதிபா; திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் பதவி உயர்வு பெற்று வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராகச் செல்ல பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த திரு.மா.இராசரெத்தினம் அவர்கள் அதிபா; பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கல்லூரியின் முகாமைத்துவ முறைமையை வலுப்படுத்துவதிலும், கலைதிட்ட ஒழுங்கமைப்பை மேம்படுத்துவதிலும், பௌதீக வளங்களை விருத்தி செய்வதிலும். இவர் காட்டிய அதீத அக்கறை கல்லூரியின் தொடர்ச்சியான வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாயிரத்துக்கு அதிகமான மாணவர் தொகையை கொண்டிருந்ததனால் கல்லூரியின் வரையறுக்கப்பட்ட வகுப்பறை வசதிகள் காரணமாக மாணவர்களுக்கு உகந்த கற்பித்தலை வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் பல சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தது. இதே வேளை கோணேஸ்வரா வித்தியாலயம் 1989 இலிருந்து தற்காலிகமாக பயன்படுத்திக் கொண்டு வந்த புனித அந்தோனியார் வித்தியாலயக் கட்டடத்தை மீளக் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.
ஆகவே ஆரம்பப்பிரிவுக்கான வகுப்பறைக் கட்டடங்களையும் மாணவர் விடுதியொன்றையும் அமைப்பதற்கான காணியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னைய அதிபர்களால் எடுக்கப்பட்டு வந்த தொடரான முயற்சிகளை அதிபா; திரு.மா.இராசரெத்தினம் அவர்கள் தனது தீவிரமான நடவடிக்கைகள் மூலம் வெற்றியடையச் செய்தார். 2006ம் ஆண்டில் மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள 168 பேர்ச் தனியார் காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இக்காணியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களில் சுவீகரிக்கப்பட்டு கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இக்காணியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களில் ஆரம்பப்பிரிவு தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்காக தற்காலிகமாகப் பாவிக்கப்பட்டு வந்த புனித அந்தோனியார் வித்தியாலயக் கட்டடம் 2011ம் ஆண்டில் கல்லூரியினால் கல்வி அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டது. 2011ம் ஆண்டில் அதிபர். திரு.மா.இராசரெத்தினம் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்ல பிரதி அதிபராக இருந்த திரு.இ.புவனேந்திரன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீண்ட காலம் கல்லூரியின் ஆசிரியராக இருந்து பின்னர் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான உதவி அதிபராக இருந்து அப்பிரிவை நேர்த்தியாக வழிப்படுத்திய பெருமைக்குரிய திரு.இ.புவனேந்திரன் அவர்கள் மாணவர்களுக்குத் தகவல் தொழிநுட்ப அறிவை வழங்குவதிலும் முன்னின்று உழைத்தவர் ஆவார். அவரது அதிபர் சேவைக்காலத்திலும் கல்லூரியின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது.
2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிபா; திரு.இ.புவனேந்திரன் அவர்கள் ஒய்வு பெற்றுச் சென்றதன் பின்பு தற்போது வரையில் திரு.செ.பத்மசீலன் அவர்கள் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். புதிய அதிபரின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தும் கல்லூரி தனது பன்முகப் பரிமாணத்தை விரிவாக்கிச் செல்வதனைக் காணமுடிகின்றது.
சுவாமி விபுலானந்தருக்குப் பின் கீழ்வரும் அதிபர்கள் இற்றை வரையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் பணியாற்றி உள்ளார்கள்.
அதே போன்று ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயத்தில் பணியாற்றிய அதிபர்கள் பின்வருமாறு
இன்று இக்கல்லூரி 2150ற்கு மேற்பட்ட மாணவர்களையும், 96 ஆசிரியர்களையும், 13 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்டத்தின் ஒரு பெரிய கல்வி நிறுவனமாக விளங்குகின்றது. பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெறுவதோடு மாத்திரமல்லாமல் இணைக்கல்விச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் பல வெற்றிகளைப் பெறுகின்றனர். இக்கல்லூரியின் மாணவர்கள் உயர்ந்த சீலமும் நன்னெறியும் கொண்டவர்களாக வளர்க்கப்படுகின்றார்கள்.
கல்லூரியின் வளர்ச்சியில் பெற்றௌர்களும் பழைய மாணவர்களும்இ தோள்கொடுத்து நிற்கின்றார்கள். இக்கல்லூரியின் ஸ்தாபகர்களையும் வளர்த்தெடுத்த அதிபா;களையும் ஆசான்களையும் இக்கல்லூரியின் சமூகம் என்றும் மறக்காது நினைவில் வைத்திருக்கும். உன்னதமான சமுதாயத்தை உருவாக்கும் பணியில் திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூருp தொடர்ந்து நடைபோடுகின்றது.
பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதை மாத்திரமே ஒரு கல்வி நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டிருக்க முடியாது. சமூகத்தில் சிறந்த ஒரு குடிமகனாக இயங்குவதற்கு தேவையான ஆற்றல்களையும் உயர் பண்புகளையும் மாணவர்களிடத்து விதைத்து விடுவதற்கான இணைக்கல்வி செயற்பாடுகளையும் கல்வி நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.
பிள்ளைகளை எதிர்காலத்திற்கான சிறந்த மனிதர்களாக உருவாக்குவதற்கான நோக்குடன் அதற்கான வேலைத்திட்டங்களையும் ஒழுங்கமைப்புக்களையும் கொண்டிருக்கும் போதுதான் ஒரு பாடசாலை சமூகத்தில் வெற்றி பெற முடியும். அத்தகைய ஒரு வெற்றி பெற்ற கல்வி நிறுவனமாக திருக்கோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மிளிருகின்றது.
சி. தண்டாயுதபாணி முன்னாள் அதிபர் முன்னாள் மாகாணக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணம்.